வியாழன், 28 மார்ச், 2024

“இந்தியா குடியரசல்ல, பணக்காரர்களின் அரசு”... நிர்மலா சீத்தாராமன் வாக்குமூலம்!!!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ‘டைம்ஸ் நவ்’ செய்திச் சேனலின் நிகழ்ச்சி ஒன்றில், "தேர்தலில் போட்டியிடுவீர்களா?" என்று நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு இவர், “இல்லை” என்று பதில் அளித்துள்ளார்.

“தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் இருந்து தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா என்று கட்சியின் தலைவர் என்னிடம் கேட்டார். இதைப் பற்றி யோசிக்கப் பத்து நாட்கள் எடுத்துக்கொண்டேன். தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லாததால் வேண்டாம் எனக் கூறிவிட்டேன்[இதைச் சொல்லப் பத்து நாட்கள் தேவையா?]” என்றார் நிர்மலா சீதாராமன்.


தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள்தான்[குறிப்பிட்ட சமூகத்தையோ மதத்தையோ சாராதவர் தான் என்கிறார். சாதியில் சிறுபான்மையினராக இவர் இருக்கலாம். பெரும்பான்மை இந்துமதம் சார்ந்தவர்தானே?] போட்டியிட்டு வெற்றி பெறமுடியும் என்பதையும் இவர் காரணமாகக் கூறியுள்ளார்.


மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் முக்கியப் ‘பாஜக’ தலைவர்களிடம் நிர்மலா சீத்தாராமனும் ஒருவர்.


தனியார் நிறுவனங்களிடம் கோடி கோடி கோடியாய் நன்கொடை[லஞ்சம்] வாங்கிக் குவித்து வைத்திருக்கும் கட்சி தங்களுடையது என்பதோ, வாக்காளர்களுக்கு லஞ்சம்[+மற்றச் செலவுகள்] கொடுத்து வாக்குகளைப் பெற ஒவ்வொரு வேட்பாளருக்கும் பாஜக’ தலைமை பணத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பதோ அம்மையாருக்குத் தெரியாதா?


அப்புறம் ஏன் “பணம் இல்லை. போட்டியிடவில்லை” என்கிறார்?


வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெற விரும்பாத உத்தமக் குணத்தவராகவும் இவர் இருக்கக்கூடும்.


இந்தப் பதிவின் நோக்கம் நிர்மலா சீத்தாராமன் தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை ஆராய்வதற்கல்ல.


நம் நாட்டுக் குடியரசு ஆட்சியின் அவல நிலையை இவர் அம்பலப்படுத்தியதற்கு நன்றி சொல்வதற்குத்தான்.


இந்தியா குடிமக்களுக்கான அரசு[குடியரசு] என்கிறார்கள்.


குடிமக்கள் என்னும் சொல், இங்குள்ள ஏழைகள், பணக்காரர்கள் ஆகிய இரு சாராரையும் உள்ளடக்கியது.


இவர்களில் எவரொருவரும் தேர்தல்களில் போட்டியிட்டு நாட்டை ஆளும் ஆட்சிக் குழுவில் இடம்பெறலாம்.


ஆனால், பண வசதி இல்லாத ஏழைகளுக்கு இது எட்டாக் கனி என்பதைத்தான், “பணம் இல்லாததால் நான் போட்டியிடவில்லை” என்ற அம்மையாரின் வாக்குமூலம் உறுதிப்படுத்துகிறது.


நிதியமைச்சர் அவர்கள் ஒளிவு மறைவில்லாமல் இந்த உண்மையைப் போட்டுடைத்ததற்காக மனம் நிறைந்த நன்றியை அவருக்குக் காணிக்கை ஆக்குகிறோம்.


மேலும்.....


இந்தியா சாதி மத பேதமற்ற[குறிப்பிட்ட சாதியையோ மதத்தையோ சார்ந்தவர் அல்ல தாம் என்பதால் போட்டியிடவில்லை என்று அம்மையார் குறிப்பிட்டுள்ளார்], உலகின் மிகச் சிறந்த குடியரசு நாடு என்று வாய் கிழியப் பேசுவதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

* * * * *

https://www.bbc.com/tamil/articles/ckk7pypnrx2o

புதன், 27 மார்ச், 2024

“நீ சக்தியின் சொரூபம்”... பட்டினியில் பரிதவிக்கும் பெண் வேட்பாளருக்கு மோடி புகழாரம்!!!

நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமர்; பல கோடிக்கு அதிபதியோ அல்லவோ, பல கோடீஸ்வரர்கள் அவருக்கு நாளும் பணி செய்யக் காத்திருக்கிறார்கள்.

மேலும், ஈடு இணையற்ற பக்திமான் என்பதால் கடவுளுக்கு நிகரான கருணையுள்ளம் கொண்டவராக இருப்பார் என்பது நம் நம்பிக்கை.

இது தேர்தல் நேரம். தன் கட்சியை[பாஜக]ச் சார்ந்த ஒரு பெண் வேட்பாளருடன் உரையாட நினைத்துத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்கிறார்[மேற்கண்ட படம்] மோடி.

பெண்களின் துயரங்களை அவரிடம் விவரித்த அந்தப் பெண்[பாஜக வேட்பாளர்] சொல்கிறார்.....

“என்னுடையது ஏழ்மையான குடும்பம். என் கணவர் தமிழ்நாட்டில் வேலை[கூலி வேலை] பார்க்கிறார்” என்று தன் குடும்ப நிலையை விவரித்திருக்கிறார்.

“கவலைப்படாதே பெண்ணே. தேர்தல் வேலையைக் கவனி. மிக விரைவில், தமிழ்நாட்டிலிருக்கும் உன் கணவருக்கு இங்கேயே ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று மோடி சொல்லியிருக்க வேண்டும். சொன்னாரா?

ஊஹூம்.

அந்தப் பெண்ணிடம், “நீங்கள் சக்தியின் சொரூபம்” என்கிறார். அந்தச் சக்தி திரிணமுல் காங்கிரஸின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டுமாம்.

வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லாமல் கணவனை அயல் மாநிலத்திற்குக் கூலிக்காரனாக அனுப்பிய ஓர் ஏழைப் பெண்ணைச் ‘சக்தியின் சொரூபம்’ என்கிற இவரை எவ்வகையில் விமர்சிப்பது?

ஏடாகூடமாக எதையும் சொல்லிவைத்தால், அதன் பின்விளைவுகளை எதிர்கொள்வதற்கான தெம்பு இல்லாததால்.....

“தேர்தலில் பெரும்பான்மை பெற்று மோடி மீண்டும் பிரதமரானால், பில்லியனோ பில்லியன் ரூபாய் செலவில் ‘சக்தி’க்கு[சிவபெருமானின் மனைவி] ஒரு கோயில் கட்டுவார்” என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.